
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் போட்டியிட முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன், நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்.எல்.ஏ.,க்கள் நமக்கு கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும்.
மக்கள் மனதில் ம.தி.மு.க.,வின் அங்கீகாரம் நீடிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக இருக்கும். தி.மு.க., குடும்பச் சொத்துக்களின் முழுவிவரமும், ஆதாரத்துடன் கூடிய பல புதிய தகவல்கள் என் கைக்கு கிடைத்துள்ளது. இப்போது நான் வெளியிட்டு பேசுவதை விட, தேர்தல் நேரத்தில் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்வேன்.
மக்கள் பிரச்னைகளில் தி.மு.க., கவனம் செலுத்தவில்லை. தினமும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது. கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி, முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளம்பர வெளிச்சம் தேடும் மாநாடாக கோவை செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.
அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது. ம.தி.மு.க.,வினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.
Source:- தினமலர் ஆகஸ்ட் 18,2010,22:37 IST