Showing posts with label DMK MPs Meet In Anna Arivalayam. Show all posts
Showing posts with label DMK MPs Meet In Anna Arivalayam. Show all posts

Tuesday, August 24, 2010

DMK MPs Meet In Anna Arivalayam

தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத் தீர்மானங்கள்

August 24, 2010 15:55:08
தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வரும் தி.மு.க., தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும்,

தி.மு.க., எம்.பி.,க்கள் மு.க.அழகிரி, ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆதிசங்கர், ஜெயத்துரை, விஜயன் ஜின்னா, ஹெலன் டேவிட், அப்துல் ரகுமான், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒன்றை மத்திய அரசு மேற்கொள்ள முடிவெடுத்து, வரைவு சட்ட முன்வடிவு ஒன்றையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. முதல்- அமைச்சர் கருணாநிதி அந்த சட்ட முன்வடிவு குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி, அது மாநில அரசுகளின் வரி விதித்திடும் உரிமையைப் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்வதாகவும், கூட்டாட்சித் தத்துவதற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து, விரிவாக கடிதங்கள் அனுப்பியதோடு, மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் தமிழகத்தின் நிதி அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு அவர்களும் மாநில அரசின் அணுகுமுறை பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் மத்திய அரசு சட்ட முன் வடிவை திருத்தி அமைத்தது, திருத்தி அமைக்கப்பட்ட சட்ட முன்வடிவும், பிழையான செயல்திட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத கால அட்டவணையும் கொண்டதாக அமைந்திருந்தது.

புதிய சட்டத்திருத்தத்தினால், சராசரி மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி உயரும் என்றும், ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி குறையும் என்றும், குறைந்த வருவாய் உடைய மக்கள் தொகை நிறைந்துள்ள நமது நாட்டில் புதிய வரிவிதிப்பு முறை பிற்போக்கானது எனக்கருதப்படும் என்றும், பல்வேறு முனைகளிலும் வேறுபாடு நிறைந்த தன்மைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய நாடாகத் திகழும் இந்தியத் திருநாட்டில் ஒரே மாதிரியான தேசிய வரியை விதிப்பது என்பது பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்றும், சிறுகுறு தொழில் முனைவோர்க்கு பாதிப்பை உருவாக்கும் என்றும், மதிப்புக் கூட்டு வரிக்கு மாறிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக, ஜனநாயக ரீதியிலான விரிவான கலந்தாலோசனையும், அதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது என்றும், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்குதல் என்பது கானல் நீராகவே முடிகிறது என்றும் கருத்துக்கள் தெரிவித்து முதல் -அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியிருந்தார்.

இவற்றிற்கு பிறகு, ஒரு மனதான ஒப்புதலின்றி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் அறிவித்திருப்பது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.

மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை கழக எம்.பி.க்களின் இக்கூட்டம் மனமுவந்து வரவேற்று, நன்றி செலுத்துவதோடு இறுதியாகவும், உறுதியாகவும் கல்வி, வரி விதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு 2011-2012ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

இதனை அறிந்ததும் முதல் -அமைச்சர் கருணாநிதி கிராமப்புற மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007-2008-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும், அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாளதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும், தமிழக அரசு நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு 15-8-2010 அன்று கடிதம் எழுதினார்.

இதனையடுத்து, மருத்துவப்படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் விரிவான விவாதம் நடத்த இருப்ப தாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல்- அமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையினையொட்டி, உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து, தமிழகத்தில் சமூக நீதிக்குச் சேதம் ஏற்படாமல் தடுத்த மத்திய அரசுக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு என்பதை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்குச் சென்று வசிக்கின்ற வாழ்வாதாரங்களை இன்னமும் சிங்கள அரசு செய்து தராமல் காலம் கடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், இந்திய அரசின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினையில் இன்னும் மந்த நிலையில் செயல்படுவதை இந்தக் கூட்டம் சுட்டிக்காட்டுவதோடு - உடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய வழி காண வேண்டுமென்று இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Source:sivajitv.com