
தேர்தலுக்குத் தயாராகிறது-கூட்டணி உள்ளிட்டவை குறித்துப் பேச உயர்மட்டக் குழு அமைப்புதேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் உயர் மட்ட நிர்வாகிகள் குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயர்மட்ட குழுவில் நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்-அவைத்தலைவர், எல்.கே.சுதீஷ்-மாநில இளைஞர் அணி செயலாளர், எஸ்.தங்கபாண்டியன்- துறைமுகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மைக்கேல் ராயப்பன்-ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், பாலன்-மதுரை ஆகியோர் பணியாற்றுவார்கள்.
பி.கிருஷ்ணமூர்த்தி உயர்மட்ட குழுவில் நியமிக்கப்படுவதால், தேர்தல் பணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கா.ஜெகவீரபாண்டியன் தேர்தல் பணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். சி.ஆர்.பாஸ்கரன், புலவர் கதிரவன் ஆகியோர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசி முடிவெடுத்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. விஜயகாந்த்துடன் சேர எங்களுக்குத் தயக்கம் இல்லை என்று டாக்டர் ராமதாஸும் கூறியுள்ளார். எனவே தேமுதிகவின் கூட்டணி வியூகம் என்ன என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
இந்த நிலையில் உயர் மட்டக் குழுவை அவர் அமைத்திருப்பது மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
Source:-Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2010, 9:14[IST]