Saturday, August 7, 2010

CM has not answered my many questions EVKS Elangovan

என்னுடைய பிற கேள்விகளுக்கு முதல்வர் விளக்கமளிக்கவில்லையே-இளங்கோவன்

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். எனது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் .

இதுகுறித்து அவர் கூறுகையில், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். அதேசமயம், மத்திய அரசின் பல திட்டங்களை மாநிலஅரசு மக்களிடையே நல்ல முறையில் விளம்பரம் செய்யவில்லை என்பது உள்பட பல கேள்விகளுக்கு அவர் விளக்கம் தரவில்லை.

என்னை பொறுத்தவரை, முதல்வரின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை. முதல்வரின் வயது, அனுபவம் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். எனது கேள்வியெல்லாம், மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக, மத்திய அரசின் எந்தத் திட்டங்களையும் மாநில அளவில் பெரிதாக விளம்பரப்படுத்தவில்லையே, ஏன் என்பதுதான்.

1 ரூபாய் அரிசித் திட்டத்திற்கு மத்திய அரசு உதவுகிறது என்று நான் கூறிய பிறகுதான், ஆமாம், மத்திய அரசு உதவுகிறது என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்தி ஒப்புக் கொண்டது திமுக அரசு. அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 80 சதவீதத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்தான் அளிக்கின்றன.

அரசின் சில குறைகளையும், தவறுகளையும்தான் நான் சுட்டிக் காட்டினேன்.

அதேபோல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ. 100 சம்பளமாக மத்திய அரசு தருகிறது. ஆனால் அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலைக்கு வருவோருக்கு ரூ. 70 முதல் 80 மட்டுமே தருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை.

இப்படி பல பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்காகத்தான் 2 முறை சந்திக்க அவகாசம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்றால், காங்கிரஸாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

கூட்டணியை பலப்படுத்துவது தான் என்னுடைய நோக்கமே தவிர, கூட்டணியை பலவீனப்படுத்துவது அல்ல. இதனால் தான், கூட்டணியில் உள்ள சிறு, சிறு தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். குறைகளை சுட்டிக் காட்டுவதால் கூட்டணி உடையாது. மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் திமுக அரசு, இதைத்தான் நான் சொல்கிறேன் என்றார் இளங்கோவன்.

Source:- Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2010, 11:46[IST]

No comments:

Post a Comment