செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலர் ரமேஷ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

திருமண மண்டபத்தை திறந்து வைத்து, ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து விஜயகாந்த் பேசியதாவது:மாமண்டூர் மக்களுக்காக திருமண மண்டபம் கட்டியுள்ளேன். இதை இடிக்க தாசில்தார் வந்தார். அமைச்சரும், கலெக்டரும் மண்டபத்தை இடிக்க கூறுகின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். மண்டபத்தை மக்களுக்கே அர்ப்பணிக்கிறேன். என் சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர், ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினேன். அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1998ம் ஆண்டு தொடங்கியிருந்தால் செலவு குறைவாக இருக்கும். இப்போது 1,800 கோடி செலவாகும். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் தான் விவசாயம் செய்கின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது. மின்சாரமே சரியாக கிடைப்பதில்லை. நீர்மட்டமும் 500 அடிக்கு கீழே உள்ளது.
இலவச "டிவி', காஸ் கொடுத்து ஓட்டுகளை பெற உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்; என்னை ஆதரியுங்கள்; மக்களுக்காக நல்லதை செய்வேன். கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது. ஜெயலலிதா வழக்கிற்கு மட்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சொல்கிறார்கள். ஆனால் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மட்டும் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மிடாஸ் மதுபான கம்பெனியில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏராளமான மதுபான கம்பெனிகளை தொடங்கி ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். தே.மு.தி.க., தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். கோயம்புத்தூரில் டிசம்பரில் கட்சி மாநாடு நடத்தப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.அறக்கட்டளை தலைவர் பிரேமலதா, அறங்காவலர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Source: தினமலர் ஆகஸ்ட் 22,2010,23:30 IST
No comments:
Post a Comment