பாமக தனித்துப் போட்டியிட்டால் 20 இடங்களை வெல்லும்-ராமதாஸ்
நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் கூட 20 இடங்களை சுலபமாக கைப்பற்ற முடியும். எங்களது தலைமையில் தமிழகத்தில் சமூக நீதிக் கூட்டணி நிச்சயம் அமையும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணி விஷயத்தில் வழக்கம்போல் மாறி மாறி பேசி வருகிறது பாமக. டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும், எங்களது பலம் இப்படி, அப்படி என்று ஊர் ஊராகப் போய்ப் பேசி வருகிறார்கள்.
அன்புமணி தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பேசி வருகிறார். டாக்டர் ராமதாஸ் தென் மாவட்டங்களை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நெல்லையில் பேசியபோது, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.
தேனியில் அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.
பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.
திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமகமுழு ஆதரவு அளிக்கிறது.
ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.
தேர்தலுக்கு ஆயத்தம்-இன்று நிர்வாகக் குழு கூட்டம்:
இந் நிலையில் பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
இதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:
கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.
இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தச் சூழலில் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது
Source:- Thatstamil.oneindia.in செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10, 2010, 9:06[IST]
No comments:
Post a Comment